Tuesday, March 31, 2009

அண்ணன் என்ன, அன்புச்சகோதரி என்ன....

அண்ணன் என்ன, அன்புச்சகோதரி என்ன....

மக்களே, சமீபத்தில் கொட்டிய சந்தர்பவாத பாச மழையில் மூழ்கி மீள முடியாமால் தவிக்கும் எனதருமை தமிழக மக்களே, உங்கள் நிலை கண்டு நாமும் எமது மேலான ஆதரவை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம், அரசியல் காரணங்களால், எல்லைகளால் நாம் பிரிந்திருந்தாலும், நீங்கள் மூழ்கி எழுந்த பாச எழுச்சி அலையின் தாக்கம் அருகிலேயே புதுவையில் உள்ள நாங்களும் உணர்ந்தோம்….

இப்படி ஒரு அண்ணனும், சகோதரியும் எங்களுடன் இல்லையே என்று சற்று பொறாமையும் கூட!!… அதற்காக வேண்டுமானால் நீங்களே வைத்து கொள்ளுங்களேன்!! என்று நீங்கள் சொல்ல வருவது எனக்கு சொல்லாமால் புரிகிறது, எதற்கு எனக்கு அந்த பாவம்…. உங்கள் பெருந்தன்மைக்கு எனது கோடான கோடி நன்றிகள்…..

அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே, இது பழைய பாடலென உங்களக்கு சொல்ல வேண்டியதில்லை….

அண்ணன் என்ன, அன்புச்சகோதரி என்ன... சந்தர்ப்ப சமயோசித கூட்டணியிலே….. இது நிகழ் காலத்தின் புதிய பரிணாமம்…

அய்யகோ… இந்தக் காட்சியை காண நடிகர் திலகம் இல்லையே… இருந்திருந்தால் வியந்திருப்பார்... இப்படித் தம்மால் நடிக்க முடியவில்லையே என்று….

மக்களே பார்த்தீர்களா... உங்களுக்காகவே இந்த புத்தம் புதிய பாசக் கூட்டணியை சமர்பிக்கிறோம், தயவு செய்து இந்த முறையும் உங்கள் பொன்னான, மகத்தான...

மக்களாகிய உங்களுக்கு, அரசியல் அமைப்பும், நாகரிகம் கண்டெடுத்த மக்களாட்சித் தத்துவம் வழங்கிய மாபெரும் வரப்பிரசதாமான வாக்குரிமையை இந்த பாசக் கூட்டினக்கே பிச்சை போல் பாவித்து வழங்கிடுமாறு உங்கள் பாதம் முதல் அடி பாதம் வரை தொட்டு, பாத பூஜை செய்து வணங்கி வணங்கிக்கொள்கிறோம்......

முடியலடா சாமி!!!.. இவனுங்ககிட்ட அப்பப்ப வோட்ட வாங்கறதுக்குள்ள என்னென்னலாம் பண்ண வேண்டிருக்கு….. சகோதரியிடம் சொல்லி இனி 25 அல்லது முடிந்தால் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் என்று அரசியல் அமைப்பை மொதல்ல மாத்தனும்…..

மக்களே, இந்த அறிய வாய்ப்பை நழுவ விட வேண்டாம்…

2011ல் அண்ணன் மருத்துவர் ஆட்சி அமையும் பொழுது!!! (தமிழகத்திலா? அல்லது புதுவையிலா? என்று நீங்கள் உங்கள் சிந்தையை குடைவது எனக்கு புரிகிறது, இன்னும் அதை நமது அணியின் வெட்டி வீரர் சரியாக புரியும்படி விளக்கவில்லை, வெளக்கியுடன் தெரியப்படுத்துகிறோம்),


நாங்கள் முன்னர் முழங்கியது...

2001ல் புதுவையில் ஆட்சி!!!

2006ல் தமிழகத்தில் ஆட்சி!!!

இப்பொழுது முழங்கிக்கொண்டிருப்பது 2011ல் இரண்டிலும்!!!, மாதத்தில் 3 வாரம் தமிழகத்தில், 1 வாரம் புதுவையில்!!!!!!

மக்களே மேலும் ஒரு முழக்கம்... 2011ல் அண்ணன் மருத்துவர் ஆட்சி அமையும் பொழுது!!!!!!! தமிழகம் மற்றும் புதுவையில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும்!!...

அருமை குடி மக்களே.... உணர்ச்சி வசப்பட வேண்டாம்.... பூரண மதுவிலக்கு எனபது... அரசு வசம் உள்ள மதுக்கடைகளை பூரணமாக விளக்கி... அதாவது மூடி... நமது அணியின் நெருங்கிய உறவினர்களுக்கும் சகாக்களுக்கும் அந்த உரிமங்கள் பெருவாரியாக வழங்கப்படும்....

நமது சின்னையா தடுப்பூசி தொழிற்சாலைகளை மூடியதை போல்..... என்ன சந்தோசம் தானே இப்பொழுது......

Saturday, March 28, 2009

தோட்டத்தில் பூத்திருப்பது காகிதப்பூ...........

தோட்டத்தில் பூத்திருப்பது காகிதப்பூ...........

ஆம் காகிதப்பூ... காந்தி படம் பொறித்த காகிதத்தால் ஆன சந்தர்ப்ப பூ…..

மக்களே கேட்டிர்களா…. நம்புங்கள் இதை… தொண்டன் கேட்டு கொண்டதாலேயே அணி மாறுகிறதாம் மரத்தை வென்றெடுத்த மறவர் அணி, மருத்துவர் அணி….

ஆம் தொண்டன் தான் அரசு தடுப்பூசி தொழிற்சாலைகளை மூடிவிட்டு, தமக்கு வேண்டியவர்களின் நிருவனங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டான்...

அணி மாறுகிறோம் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு போகவேண்டியது தானே..... எந்த விசாரணை குழு உங்களை காரணம் கேட்டுது.... புலன் விசாரணை நடத்தியது?… தெரிந்தது தானே அனைவருக்கும் மருத்துவரின் மகுத்துவம்…..

ஒரு சின்ன அமைச்சர், ஒரு பெரிய அமைச்சர், ஒரு மாவட்ட செயலாளர் கூட வந்து பார்க்கவில்லை, வேதனை படுத்தியதும், உதாசினப் படுத்தியதும், 5 ஆண்டுகள் நிறைவு பெரும் தருவாயில் தான் அறிவிக்க வேண்டும் என்று ஏதாவது வரைமுறை, நல்லொழுக்க விதி இருக்கிறதா மருத்துவர் அணியில்?..

எதற்கு கேட்கிறேன் என்றால் வரைமுறைகளை ஒழுக்கமாக பின்பற்றும் அணி அல்லவா மருத்துவர் அணி....

ஆம் இருக்ககூடும், தமிழகத்தில் தமிழ்ப்பற்றும், ஒழுக்கமும் இவர்களால் தானே கட்டி காக்கப்படுகிறது…..

தமிழக மக்களே, 2001ல் புதுவை மக்கள் புகட்டிய பாடத்தை ஒருமுறை நீங்களும் புகட்ட வேண்டும்,

என்ன முழக்கம், என்ன ஆராவாரம்,

நண்பர்களே, மறந்திருந்தால், இதோ இன்னுமொருமுறை அந்த வேத முழக்கத்தை, மருத்துவரின் பெருநம்பிக்கை கூற்றை நினைவு படுத்துகிறேன்,

2001 இல் புதுவையில் ஆட்சி,
2006 இல் தமிழகத்தில் ஆட்சி,

என்ன ஒரு தொலைநோக்கு பார்வை பாருங்கள்….

கலைஞர் அவர்களே, தேர்தலுக்குப்பின்…

கலைஞர் அவர்களே, தேர்தலுக்குப்பின்…

ஆம், தேர்தலுக்குப்பின் என்ன செய்ய போகிறோம்,

வீடு இருந்தால் தான் கூரை அமைக்க முடியும், ஆட்சி இருப்பதால் தான் இந்த அளவிளாவது நம்மால் ஈழ போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க முடிகிறது என்றீர்கள்…. அதனால் தான் கையாளாகாத கைக்கட்சியுடன் இன்னமும் ‘அரசியல் நிர்ப்பந்தம்’ என்ற போர்வையில், மொழி உணர்வு, இன உணர்வு, மனிதாபமானம், இன்னும் என்னவெல்லாம் உள்ளதோ, அனைத்தையும் மறந்து, மறைத்து, மீண்டும் மக்களை சந்திக்க களம் கண்டாகி விட்டது….

இது கையாளாகாத கைக்கழுவ வேண்டிய கைகளின் காலம் என்று எடுத்து கொள்ளலாமா….

சரி, இப்போது அடுத்து என்ன நடக்கக்கூடும் என்பதை பார்போம்,

சென்ற முறை போல் கழக வேட்பாளர்கள் வெற்றி ஈட்டினால், ஈழக் கொள்கையில் தமிழர் ஆதரவு நிலை கொண்டால் மட்டுமே ஆட்சியில் பங்கேற்போம், ஆட்சிக்கும் ஆதரவு தருவோம் என்று நிர்பந்திப்பீர்களா?

எப்படியாவது, எந்த இழி நிலையையும் கையாண்டு, ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கம் கொண்ட தேசிய மாக்கட்சி, அந்த குறுகிய காலத்திற்காவது நிர்பந்திக்கப்படுமா?

மாறாக, அணைத்து இழிநிலைகளையும் கடந்து கூட மத்தியில் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு, தமிழகத்தில் ஆட்சி பங்கீடு கேட்டால், அப்போது கழகம் என்ன செய்யப்போகிறது? இன வஞ்சகர்களை அமைச்சர்களாக்கி அழகு பார்க்க போகிறதா?….

தமிழன் ஈழத்தில் மாண்டால் என்ன, இங்கு தமிழகத்தில் மாண்டால் என்ன, அவனோடு சேர்ந்து நாமும் மாண்டு போவோம் என்று மயிலை மேடையில் நீங்கள் ஊகித்ததை, கையாளாகாத கைகள் ஆட்சியில் பங்கு பெற்று நடைமுறை படுத்த அனுமதிப்பீர்களா?…..

ஆவடியில், தமிழ் மண்ணில் உற்பத்தி செய்யப்பட்ட பீரங்கிகள் எதற்காக கேரளா வழியாக பயணித்து, ஈழ மண்ணில் தமிழன் இரத்தத்தை நுகர வேண்டும், பீரங்கிக்கும் தமிழ்ப்பற்றை போதிக்கிறதா தேசிய கட்சி, தமிழனக்கு இறையாண்மை கற்று கொடுப்பதைப்போல்,

எதற்காக அவ்வளவு தூரம் அவை பயணிக்க வேண்டும், இங்கேயே ஆவடியை சுற்றி, இங்குள்ள தமிழர்களின் தலையை துளைக்கட்டும், அதை கைக்கொட்டி களிக்கட்டும் கைக்கூட்டம்,

நண்பர்களே, தமிழகத்தில் தமிழராய் பிறந்து விட்ட சகோதர சகோதரிகளே, நாமும் இப்பொழுதே பழகிக்கொள்வோம், பதுங்கு குழியில் வாழ்வது எப்படி என்று, நமக்கு அதிகம் சிரமம் இருக்காது அவற்றை கற்றுக்கொள்ள, அருகிலேயே இருக்கிறான் ஈழத்தமிழன்,

கற்று கொடுப்பான் நமக்கு இலவசமாக….

Tuesday, March 10, 2009

வருக வள்ளுவரே வருக....

வருக வள்ளுவரே வருக....

ஆம் வரவேற்பை, இப்போதைய கால சூழலக்கு பொருந்தும் குறள் மூலமாகவே ஆரம்பிக்க முனைகிறேன், (எனினும் குறள் மட்டுமே பொருத்தமே தவிர, சூழலும் நிலையும், என்றும் போல மாறாமலே உள்ளன)....

குறள் எண் 527 (பொருட்பால்; அரசியல்; 53.சுற்றம் தழால்)

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே யுள

உணவை கண்டதும் கரைந்து, தன் இனத்தோடும் சேர்ந்திருந்து காக்கை உண்ணும்; அத்தகைய இயல்பினர்க்கே சிறப்புகளும் வந்து சேரும்.
(நன்றி: உரையாசிரியர் இரா. இராசேந்திரன்)

தமிழன் இப்படி ஒற்றுமையின்றி அவலநிலை கொள்வான் என வள்ளுவர் அன்றே கணித்திருக்க வேண்டும், ஆகவே தான் காக்கையை பார்த்தாவது கற்று கொள்ளுங்கள் என்று எழுதி சென்றுள்ளார்...

ஆனால் இன்றைய நிலை என்ன... மனிதன் காக்கைக்கு உணவு கொடுக்கும் நிலை கடந்து, காக்கை மட்டுமே உணவு கொடுக்க முடியும், என்கிற நிலையில் என் இனம் போராடி கொண்டுள்ளது....

ஆம் நண்பர்களே, காக்கை மட்டுமல்ல, எனக்கு தெரிந்தவரை, மனிதனை தவிர, பெரும்பாலான உயிரினங்களின் குணமும் இதுதான் என்பது என் கணிப்பு, (சற்று அல்லது பெரும் தவறாக இருந்தால் திருத்தவும்);

நான் மனிதனை மட்டும் வேறுபடுத்தும் காரணம், அவன் மட்டும்தான் தனக்குள்ளே எண்ணிலடங்கா பிரிவினைகளை உண்டாக்கி, வள்ளுவரே காக்கையை உதாரானமாக்கும் நிலையை அன்றே உண்டாக்கியுள்ளான் ... அப்படி தான் நான் கருதுகிறேன்...

ஆக வள்ளுவர் என்ன கூறியுள்ளார், காக்கை போல் அரவணைத்து, ஆதரவு தந்து, தமக்குள் இருக்கும் செயற்கையான பிரிவினைகளை கடந்து, ஒரே இனமாக கூடி வாழ்ந்தால் சிறப்பு வந்து சேரும் என்கிறார்...

ஆனால் தற்பொழுது நிலவும் சூழல் என்ன, ஓரினம், ஆம் கல்தோன்றி, மண்தோன்றுமுன் தோன்றிய இனம், காலம் அளவிட முடியாத பழமையான இனம், தன் சொந்த மண்ணில் வாழ உலகத்திடிம் உரிமை கோரும் நிலை, காலம்.

ஈழ சகோதரன் கேட்பது என்ன, கூடி வாழ்ந்தால் சிறப்பு என்கிறார் வள்ளுவர், எங்களக்கு சிறப்பு வேண்டாம், எங்கள் சொந்த மண்ணில் உயிரோடு வாழும், உரிமையோடு வாழும் உரிமை கொடுங்கள் என்கிற அவல நிலைதான் இன்று.

நான் எண்ணுகிறேன், வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இருந்திருக்காது இறையாண்மை, மக்களாட்சி, வெளியுறவுக்கொள்கை, இன்னும் பிற மக்களை ஏமாற்றும் கருவிகள்...

நான் வேண்டுவேன் (வாய்ப்பு கிடைத்தால்) இறைவனிடம், இறைவா, ஒருமுறை மீண்டும் அனுப்பிவை எங்கள் வள்ளுவரை (வேண்டாம் தமிழனாக), அவர் கற்க வேண்டியவை நிரம்ப உள்ளன தமிழகத்தில், இறையாண்மையும், தேசிய ஒருமைப்பாடும்....

ஆம் வள்ளுவரே கற்பிக்கிறோம் உமக்கு, நீரும் தமிழர்தானே..... (உமக்கு வேண்டுமானால் சிறப்பு நுழைவு அமைத்து தருகிறோம், ஏனெனில் உமக்கு நல்ல செல்வாக்காமே, உலகமெல்லாம் உமது புகழ் பரவியிருப்பதாக கூறுகிறார்கள், இங்கே தமிழகத்தில் கூட இன்னும் உமது பெயர் நிலைத்து உள்ளது, அது மட்டுமா, கோட்டம் அமைத்துள்ளோம், ஈழ நிலையை, உன் இன, என் இனத்தின் அவல நிலையை நீர் எப்போதும் பார்த்து கொண்டிருக்கவே சிலையாக்கியுள்ளோம் உம்மை அருகிலேயே)

வருக வள்ளுவரே வருக,

கற்று செல்க, வாழ்வியல் நெறிமுறையை, இங்குள்ள தலைவர்களிடமும், அவர்தம் தொண்டர்களிடமும்...

வருக வள்ளுவரே வருக,

இந்த தமிழினம் காத்திருக்கும்,
நீ மீண்டும் குறள் படைப்பாயா என்று;
தமிழனாய் பிறந்துவிட்ட எங்கள் நிலைகண்டு.....

Friday, March 6, 2009

பழம் புளித்தது இப்பொழுது.....

பழம் புளித்தது இப்பொழுது.....

ஆம் நண்பர்களே, கதையில் நரி உணர்த்திய அதே சித்தாந்தத்தை இன்று புரட்சி பல படைத்த தலைவி, மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்த, தூங்கிக் கொண்டிருந்த மக்களை, மாசற்ற மக்களை (பிள்ளைகளை) தாயன்பு கொண்ட புரட்சித்தாய் அழைக்கிறார், எழுச்சி கொள்ள அழைக்கிறார்,

ஆம் நண்பர்களே, ஈழத் தமிழனை காக்க அழைக்கிறார்…..

ஆம் நண்பர்களே, அதிகமில்லை, சில நாட்களுக்கு முன் தான் “போரில் மக்கள் இறப்பது ஒரு இயல்பான நிகழ்வு தான்” என யாருக்குமே உதித்திடாத மாபெரும் சிந்தனையை இவ்வுலகக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு, தமது சிந்தனை பெட்டகத்திலிருந்து எடுத்து விளக்கிய புரட்சித்தாய் அழைக்கிறார்…

அது மட்டுமா…

“ஈழம் என்ற ஒரு நிலம் என்றுமே இருந்தது இல்லை” என்ற வரலாற்றை தமிழர்களுக்கு கற்று கொடுத்தார்… ஆகவே தமிழர்கள், இன எதிரியின், பகைவனின், நில ஆக்கிரமப்பையும், அவன் அங்கு புரியும் எண்ணிலிடங்கா அவலங்களையும் வாய்பொத்தி, அடங்கி ஏற்று கொள்ள வேண்டும் என்று சொல்லாமல் சொல்லியவர் தான் புரட்சித்தாய்…..

அது மட்டுமா… இன்னும் உள்ளன… புரட்சியின் இதிகாசங்கள்....

“அங்கே இருந்தால் புதைகுழியில் தான் போவீர்கள்.. இங்கே வந்தால் நன்மை உங்களுக்கு தான் அதிகம் எங்களுக்கு விட”... என்று கூவி கூவி கூவியதெல்லாம்...
மக்களே.. அதையா இன்னும் நீங்கள் என்ன என்று கேட்கிறீர்கள்... மறந்திருப்பீர்கள் என்று நினைத்தோம்.....

இல்லை இல்லை... அது போன மாசம்... நாங்கள் அவர்களை அழைக்கவே இல்லை... இப்பொழுது இதை சொல்கிறோம்..... முடிந்தால், அடுத்த மாசம் இதையே சொல்வோம், முடிந்தால் (சூழ்நிலைகளை பொருத்து)...

ஆகவே... புரட்சியின் படையினரே... புறப்படுவீர்.... உங்கள் தாய் அழைக்கிறார்..... இன்னுமொரு புரட்சி செய்ய .....