Tuesday, March 10, 2009

வருக வள்ளுவரே வருக....

வருக வள்ளுவரே வருக....

ஆம் வரவேற்பை, இப்போதைய கால சூழலக்கு பொருந்தும் குறள் மூலமாகவே ஆரம்பிக்க முனைகிறேன், (எனினும் குறள் மட்டுமே பொருத்தமே தவிர, சூழலும் நிலையும், என்றும் போல மாறாமலே உள்ளன)....

குறள் எண் 527 (பொருட்பால்; அரசியல்; 53.சுற்றம் தழால்)

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே யுள

உணவை கண்டதும் கரைந்து, தன் இனத்தோடும் சேர்ந்திருந்து காக்கை உண்ணும்; அத்தகைய இயல்பினர்க்கே சிறப்புகளும் வந்து சேரும்.
(நன்றி: உரையாசிரியர் இரா. இராசேந்திரன்)

தமிழன் இப்படி ஒற்றுமையின்றி அவலநிலை கொள்வான் என வள்ளுவர் அன்றே கணித்திருக்க வேண்டும், ஆகவே தான் காக்கையை பார்த்தாவது கற்று கொள்ளுங்கள் என்று எழுதி சென்றுள்ளார்...

ஆனால் இன்றைய நிலை என்ன... மனிதன் காக்கைக்கு உணவு கொடுக்கும் நிலை கடந்து, காக்கை மட்டுமே உணவு கொடுக்க முடியும், என்கிற நிலையில் என் இனம் போராடி கொண்டுள்ளது....

ஆம் நண்பர்களே, காக்கை மட்டுமல்ல, எனக்கு தெரிந்தவரை, மனிதனை தவிர, பெரும்பாலான உயிரினங்களின் குணமும் இதுதான் என்பது என் கணிப்பு, (சற்று அல்லது பெரும் தவறாக இருந்தால் திருத்தவும்);

நான் மனிதனை மட்டும் வேறுபடுத்தும் காரணம், அவன் மட்டும்தான் தனக்குள்ளே எண்ணிலடங்கா பிரிவினைகளை உண்டாக்கி, வள்ளுவரே காக்கையை உதாரானமாக்கும் நிலையை அன்றே உண்டாக்கியுள்ளான் ... அப்படி தான் நான் கருதுகிறேன்...

ஆக வள்ளுவர் என்ன கூறியுள்ளார், காக்கை போல் அரவணைத்து, ஆதரவு தந்து, தமக்குள் இருக்கும் செயற்கையான பிரிவினைகளை கடந்து, ஒரே இனமாக கூடி வாழ்ந்தால் சிறப்பு வந்து சேரும் என்கிறார்...

ஆனால் தற்பொழுது நிலவும் சூழல் என்ன, ஓரினம், ஆம் கல்தோன்றி, மண்தோன்றுமுன் தோன்றிய இனம், காலம் அளவிட முடியாத பழமையான இனம், தன் சொந்த மண்ணில் வாழ உலகத்திடிம் உரிமை கோரும் நிலை, காலம்.

ஈழ சகோதரன் கேட்பது என்ன, கூடி வாழ்ந்தால் சிறப்பு என்கிறார் வள்ளுவர், எங்களக்கு சிறப்பு வேண்டாம், எங்கள் சொந்த மண்ணில் உயிரோடு வாழும், உரிமையோடு வாழும் உரிமை கொடுங்கள் என்கிற அவல நிலைதான் இன்று.

நான் எண்ணுகிறேன், வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இருந்திருக்காது இறையாண்மை, மக்களாட்சி, வெளியுறவுக்கொள்கை, இன்னும் பிற மக்களை ஏமாற்றும் கருவிகள்...

நான் வேண்டுவேன் (வாய்ப்பு கிடைத்தால்) இறைவனிடம், இறைவா, ஒருமுறை மீண்டும் அனுப்பிவை எங்கள் வள்ளுவரை (வேண்டாம் தமிழனாக), அவர் கற்க வேண்டியவை நிரம்ப உள்ளன தமிழகத்தில், இறையாண்மையும், தேசிய ஒருமைப்பாடும்....

ஆம் வள்ளுவரே கற்பிக்கிறோம் உமக்கு, நீரும் தமிழர்தானே..... (உமக்கு வேண்டுமானால் சிறப்பு நுழைவு அமைத்து தருகிறோம், ஏனெனில் உமக்கு நல்ல செல்வாக்காமே, உலகமெல்லாம் உமது புகழ் பரவியிருப்பதாக கூறுகிறார்கள், இங்கே தமிழகத்தில் கூட இன்னும் உமது பெயர் நிலைத்து உள்ளது, அது மட்டுமா, கோட்டம் அமைத்துள்ளோம், ஈழ நிலையை, உன் இன, என் இனத்தின் அவல நிலையை நீர் எப்போதும் பார்த்து கொண்டிருக்கவே சிலையாக்கியுள்ளோம் உம்மை அருகிலேயே)

வருக வள்ளுவரே வருக,

கற்று செல்க, வாழ்வியல் நெறிமுறையை, இங்குள்ள தலைவர்களிடமும், அவர்தம் தொண்டர்களிடமும்...

வருக வள்ளுவரே வருக,

இந்த தமிழினம் காத்திருக்கும்,
நீ மீண்டும் குறள் படைப்பாயா என்று;
தமிழனாய் பிறந்துவிட்ட எங்கள் நிலைகண்டு.....

No comments:

Post a Comment