ஆம் இந்த வினா என்னை இத்தருணத்தில் சிந்திக்க செய்கிறது,
தமிழின உணர்வாளர்களுக்கும், வஞ்சகர்களுக்கும் இடையே வேறுபாட்டை உணரச் செய்கிறது...எங்கோ தொலைதூரத்தில் நடக்கும் விமானக் குண்டு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தலைவன், தலைவி என தம்மை தாமே போற்றிக்கொள்ளும் தமிழ் இன வஞ்சகர்களும், எட்டப்ப கும்பலும், கரை தாண்டினால் தரை தட்டும் தூரத்தில், இன்னலை மட்டுமே சுவாசிக்கும் என் இன சகோதரன் குண்டு மழைக்கு இடையே தினம் தினம் தன் வசிப்பிடத்தை மாற்றுவதை மட்டும் அறிய முடியவில்லை, அறியவும் மனமில்லை, இந்த தன்மானமற்ற இனவஞ்சக கூட்டத்திற்கும் அதன் தலைவன் தலைவிக்கும்.
தமிழர்களே, என் இன உறவுகளே, தோழர்களே, இனம் காக்க போராடும் நண்பர்களே, இந்த தருணத்தில் தமிழகத்தில் வாழும் நாம் இரண்டு முனைகளில் நம் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம்,ஒன்று தாய் நிலத்தை காக்கும் போராட்டத்தில் உயிரை துச்சமென எண்ணி போரிடும் வீரர்களுக்கும், இந்த போராட்டத்தில் அல்லலுற்று வாடும் நம் உறவுகளுக்கு நம்மால் இயன்ற பங்களிப்பை நல்கி அவர்களுக்கு போராடும் நம்பிக்கையை தருவதே ஆகும்; இரண்டாவது, தமிழனக்கு, தமிழ் இனத்துக்கு எதிரி வேற்று நாட்டவனோ, வேற்று கிரகத்தவனோ அல்ல, தமிழன் என்று தன்னை கூறிக்கொள்ளும் இனவஞ்சகன்தான் என்று உணர்ந்தவர்களின் வாய்மொழியை நாமும் இந்த கால சூழலில் உணர காரணமான நம்மிடையே வாழும் இனவஞ்சகர்களை எதிர்கொண்டு அவர்களின் சதிச்செயலை காற்றோடு காற்றாக சிதரச்செய்வதே ஆகும். ஆம் பல முனைகளில் மண்ணை காக்க போராடும் தமிழனக்கு ஆதரவாக நாம் இந்த இரண்டு முனைகளில் போராடிதான் ஆகவேண்டும். இனம் காக்க, மன்னர்கள் கட்டிக்காத்த நிலத்தை மீட்க தமிழினமே ஒன்றுபடுவோம், ஒன்றுபட்டு வெற்றிகொண்டான் என்று வரலாறு படைப்போம்.
என் மொழி பேசும் சகோதரனின் போராட்டம் பற்றி சமீபத்தில் மட்டுமே நான் உன்னிப்பாக கவனிக்க, என்றுமே நான் தேசிய ஒருமைப்பாடு, இறையாண்மை போன்ற சொற்களை பெரிதும் கவனித்தது இல்லை, இந்த கால நிலையில் கூட எனக்கு பிரிவினை எண்ணம் ஒரு தேவையற்ற மாயையாகவே தோன்றுகிறது. ஆனால் இந்த எண்ணம் மங்கி விடுமோ என்ற ஐயமும் சற்றே எங்கோ ஒரு ஓரத்தில் எழும்பும் எண்ணமும் தோன்றுவதற்கான அறிகுறிகள், ஆம் அறிகுறிகள் மட்டுமே தென்படுகின்றன, அவ்வப்போதைய வானிலை அறிக்கை போல் அவை அறிகுறிகளாகவே அமைய வேண்டும் என்பது தான் எனது எண்ணமும் கூட. ஆனால் இவை அனைத்தும் நம் மத்திய அரசு, ஆம் நம் மத்திய அரசின், இப்போதைய மத்திய அரசு மற்றும் இனி வரும் மத்திய அரசுகளின் வெளியுறவு கொள்கை, குறிப்பாக ஈழ கொள்கையை பொறுத்தே அமையும் என்பது எனது தவிர்க்க முடியாத விமர்சனம்.
இன்று காலை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சீரிய இளம் பேச்சாளர் ஒருவர் கூறுகிறார், தமிழன் நேற்று இன்று நாளை என்ற தலைப்பில், கார்கிலுக்கு ஒன்றுபட்டு வெகுண்டெழும் தமிழன் ஈழத்து இனம் காக்க உள்ளூர் வேறுபாடுகளை கடந்து ஒன்றுபடவேண்டும், என்று....
தமிழனின் நலன் காக்க, தமிழ் இனம் காக்க உதவாத அரசை தமிழன் பொருத்து கொள்ளும் காலமும் எல்லையை கடக்கும் நிலையை மத்திய அரசு தெரிந்தே உருவாக்க வேண்டாம் என்றும், அந்நிலை உருவாகாத கனம் வரை மட்டுமே தமிழன் ஒருமைப்பாடு, இறையாண்மை, இன்னும் ஏனைய சொற்களுக்கு கட்டுபடுவான் என்றும், எல்லை கடந்த பின்னர், பொறுமை இழந்தபின், அது கட்டுபாடற்ற காட்டாற்று வெள்ளம் ஊரை உருககொலைப்பது போல், எதற்கும் துணிந்தவனாவன் என்பது எனது எண்ணம், இன உணர்வாளர்களின் எண்ணமும் இதுவாகும் என்பது எனது நம்பிக்கையும் கூட.
பள்ளிப்பருவத்தில் காலை வேளையில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதத்தையும் பாடுவதே என் தலைமுறை நண்பர்களும், இன்றைய பள்ளி சிறார்களும் கடைபிடிக்கிறார்கள். ஆனால், ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடும் நிலையை உருவாக்குவதும், இன்றைய நிலையை நீடிக்கச் செய்வதும் நம் மத்திய அரசின் தமிழர் இன கொள்கைகளை பொறுத்தே அமையும் என்பதில் ஐயமில்லை. நண்பர்களே நம் மாணவர்கள் ஒரு பாடல் மட்டுமே பாட வேண்டிய நிலை வரவேண்டும் என்று நான் விரும்பவில்லை, ஆனால் நாம் அந்த நிலைக்கு தள்ளப்பட்டால், நம் மத்திய அரசின் இன்றைய நிலையும், எதிர்கால நிலையும் இதே நோக்கில் தொடருமேயானால், நாம் எந்த சூழலையும் எதிர்கொள்ள நாம் நம்மை பண்படுத்திக்கொள்ள வேண்டும்,
தமிழர்களே, என் இன உறவுகளே,
இன வஞ்சகர்களை இனம் காண்போம் அவர்தம் நயவஞ்சக சதிச்செயலை முறியடிப்போம்
இனம் காப்போம், மொழி காப்போம்......
No comments:
Post a Comment